விழா கோலம் பூண்டது அதிமுக எழுச்சி மாநாடு...வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் மைதானம்!

விழா கோலம் பூண்டது அதிமுக எழுச்சி மாநாடு...வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் மைதானம்!

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடல் விழா கோலம் பூண்டுள்ளதால் மைதானம் முழுவதும் மின்விளக்குகளில் ஜொலிக்கிறது.

வரும் 20ஆம் தேதி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது மலைபோல் பிரமாண்ட நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நுழைவாயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான விழா மேடை சுமார் 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கான்கிரீட் தளம் கொண்டு 200-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வகையில் எல் இ டி திரைகளுடன் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : "இரும்புக் கோளுக்கு" கடிதம் அனுப்பிய பாஜகவினர்!

மாநாட்டிற்கு வருகை தரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் தகரக் கொட்டைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேடையின் இரு புறமும் கூடுதலாக 50 ஆயிரம் நாற்காலிகள் அமைக்கப்பட்டு நான்கு மிகப்பெரிய எல்இடி திரையரங்குகளும் 12க்கும் மேற்பட்ட சிறிய எல்இடி திரையரங்குகளும் வைக்கப்பட்டுள்ளது. 

அனைத்து இடங்களிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தற்போது மாநாடு நடைபெறும் இடம் முழுவதும் விழா கோலம் பூண்டு காணப்படுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் அதிமுக எழுச்சி மாநாடு அன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்களை தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே அதிமுக மாநாட்டிற்கான சிறப்பு ரயில் நேற்றிரவு சென்னையிலிருந்து மதுரை புறப்பட்டு சென்றது. முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த சிறப்பு ரயிலில் 13 பெட்டிகளில் ஆயிரத்து 300 அதிமுக தொண்டர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். சிறப்பு ரயில் மட்டுமின்றி, வழக்கமான ரயில்களிலும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.