தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி...

கனமழை எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி...

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பாபசாசம் அகஸ்தியார் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சங்கிலிவாடி பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. தொடர்ந்து பெய்த கனமழையால் இந்த ஏரி முழுமையாக நிரம்பியது. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயம் பெறும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி மாமண்டூர் பகுதியில் உள்ள பெரிய ஏரி 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைதொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள  கெட்டிசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியுள்ளதால் அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த கோட்டைக்கருங்குளத்தில் உள்ள நம்பியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. கொடுமுடியாறு அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்ததால் நம்பியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதைதொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த தென்கரை கோட்டை பகுதியில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை நீங்கும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.