கருத்தடை செய்யப்பட்ட பெண் மீண்டும் கர்ப்பம்- அறுவை சிகிச்சையின்போது தாய் உயிரிழப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட பெண், மீண்டும் கருவுற்றநிலையில் சிசுவை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சையில் தாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்தடை செய்யப்பட்ட பெண் மீண்டும் கர்ப்பம்-  அறுவை சிகிச்சையின்போது தாய் உயிரிழப்பு

புதுக்கோட்டை கைக்குறிச்சியை சேர்ந்த வீரன், வீராயி தம்பதியின் இரண்டாவது மகள் ராணி வயது( 25). இவருடைய கணவர் முத்துக்குமார் வயது (27). இவர்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் முடிந்த நிலையில் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

முத்துக்குமார், ராணி தம்பதியினர் தற்சமயம் பொள்ளாச்சியில் வசித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த 15 ஆம் தேதி முத்துக்குமாரின் மனைவி ராணிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ராணிக்கு அங்கு பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவர் கருவுற்று இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஜீலை மாதம் 2018 ஆம் ஆண்டு ராணிக்கு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும்,  அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, இன்று அதற்கான அறுவை சிகிச்சை செய்தபோது, எதிர்பாராத விதமாக ராணி உயிரிழந்தார். இதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவர்கள்  அலட்சியபோக்கு மற்றும் அஜாக்கிரதையால் தான் தன் மகள் உயிரிழந்துள்ளார் என கூறி இறந்த பெண்ணின் பெற்றோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.  மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத வரை உடலை வாங்க மாட்டோம் என ராணியின் பெற்றோர்கள், உறவினர்கள்  கண்ணீர் மல்க நின்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.