5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு...

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து 11 ஆயிரத்துக்கும் அதிகமான கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு...

தேனி மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, போடி, கம்பம், பாளையம் உள்ளிட்ட மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

இதன் காரணமாக வைகை அணைக்கு வரும் நீர்வரத்து  கிடுகிடுவென உயர்ந்தது. ஏற்கனவே அணை முழு கொள்ளளவை எட்டியிருந்ததால், தற்போது அதிகப்படியான உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வினாடிக்கு 11 ஆயிரத்து 559 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.