விழாவில் எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சனம் செய்த ஸ்டாலின்...!

விழாவில் எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சனம் செய்த ஸ்டாலின்...!

கோவையில் 663 கோடி ரூபாய் மதிப்பிலான, 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கோவைக்கு சுற்றுப்பயணம்:

பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, 3 நாள் பயணமாக கோவை செல்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகளை நேற்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உற்சாக வரவேற்பு:

இந்நிலையில், இன்று கோவை சென்ற மு.க.ஸ்டாலினுக்கு , தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து, ஈச்சனாரி பகுதிக்கு சென்றார்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல்:

தொடர்ந்து ஈச்சனாரி பகுதிக்குச் சென்ற அவர், நிகழ்ச்சியில் 663 கோடி ரூபாய் மதிப்பில், 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 272 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 229 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, 588 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு வழங்கினார். 

மேலும் படிக்க: https://www.malaimurasu. com/posts/cover-story/Plan-to-hike-transport-service-charges--OPS-condemns

மு.க.ஸ்டாலின் உரை:

தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை என்றாலே பிரம்மாண்டம் தான், தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமாக கோவை விளங்கி வருவதாக தெரிவித்தார். இங்கு பெருந்தொழில்கள் மட்டுமல்லாமல், சிறு, குறு தொழில்களும் அதிகளவில் உள்ளன. இதுவரை நடைபெற்ற அரசு விழாவிலே அதிக நலத்திட்டங்கள் இங்குதான் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்:

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்” 234 தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றார். மேலும் குடிநீர் மற்றும் நீராதாரத்தை மேம்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார். அத்துடன் வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கான பணிகள், இணைப்பு பாலங்கள், சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், மருத்துவ வசதிகள், பள்ளி மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், ஐடிஐ கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

எதிர்க்கட்சியை மறைமுகமாக சாடிய ஸ்டாலின்:

இந்நிலையில், தொடர்ந்து பேசிய அவர் தன்மானம் இல்லாத, இனமானம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் மட்டுமே தமிழக அரசைப் பற்றி விமர்சிப்பதாகவும், காழ்ப்புணர்ச்சியோடு தூற்றும் சிலரும் பிழைக்க வேண்டும் என தாம் எண்ணுவதாகவும் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சியினரை மறைமுகமாக சாடினார்.