"திரைத் துறையைக் கூட திமுக விட்டுவைக்கவில்லை" எடப்பாடி பழனிசாமி!

தமிழக உரிமைக்காகவும் சிறுபான்மையினர் உரிமைக்காகவும் போராடுவோம் என்பதை வலியுறுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , X தளத்தில் உரையாற்றினார். 

அப்போது, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநில முதலமைச்சர்கள் பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்தவில்லை என்றும் ஒவ்வொரு மாநிலமும் மாநில உரிமைகளை காப்பாற்றவே அந்த முடிவை எடுத்தார்கள் என்றும் கூறினார். 

அந்த வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறிய அவர், தமிழக மக்கள் உரிமை காக்கவும், தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் கொண்டு வரவும், சிறுபான்மை மக்கள் உரிமைக்காக போராடவும் இந்த பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும், திரைத் துறையை கூட விட்டு வைக்காத திமுக அரசு, தன் குடும்ப நிறுவனங்கள் வெளியிடும் படங்களுக்கு மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கும் போக்கு   தொடர்கிறது என்று குற்றம்  சாட்டினார்.  பிரபல நடிகரின் திரைப்படம் கூட இந்த பிரச்சினைகளை சந்தித்து வருவதாக செய்திகள் வருவதாக  கூறினார்.