தமிழகத்தின் பல மணல் குவாரி உரிமையாளர்களின் இடங்களில் ED சோதனை!!

தமிழகத்தின் பல மணல் குவாரி உரிமையாளர்களின் இடங்களில் ED சோதனை!!

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரி ஒப்பந்ததார்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நடப்பதாக வந்த புகார்களையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னை உள்பட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனா். 

அதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கத்தில் கனிமவளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்த சோதனை நிறைவடைந்த நிலையில், மணல் குவாரியில் இருந்து எத்தனை யூனிட்  மணல் எடுக்கப்பட்டு வருகிறது என்ற விவரங்களை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இதேபோல் திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பெருமாநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் தொடா் சோதனை மேற்கொண்டனா். முடிவில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனா். 

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ள மணல் குவாரியில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனா். அப்போது குவாரியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்டவை குறித்து பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கனிம வளத்துறை இளநிலை பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 3 போிடம் விசாரணை நடத்தினா். மேலும் கூடுதல் விசாரணைக்காக அவா்களை அமலாக்க துறையினர் காரில் அழைத்துச் சென்றனர். 

இதேபோல் திண்டுக்கல் நகர் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபா் ரத்தினம் என்பவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரத்தினத்தின் வழக்கறிஞர்கள் சிலர் அவரது வீட்டின் முன்பு குவிந்து அவரை சந்திக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து ரத்தினத்தின் வீடு, அலுவலகம், அவரது மைத்துனர் வீடு ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

பல்வேறு பகுதிகளில் உள்ள மணல் குவாாிகளில் அமலாக்கத்துறையினா் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் புத்தூர் மணல் குவாரி இயங்காமல் வெறிச்சோடி காணப்படுகிறது.