காஞ்சிபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை... மீறினால் கடும் நடவடிக்கை!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதையொட்டி காஞ்சிபுரத்தில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தலின் போது அறிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்காக தகுதியின் அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதலமைச்சரின் வருகையொட்டி காஞ்சிபுரம் மாநகரில் இதற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல், காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க || மணல் தொழிலதிபர் ராமச்சந்திரன் வீடுகளில் 3வது நாளாக ED சோதனை!!