சிறுவனின் புற்றுநோய் கட்டிகளை அகற்றி, மருத்துவா்கள் சாதனை!

சிறுவனின் புற்றுநோய் கட்டிகளை அகற்றி, மருத்துவா்கள் சாதனை!

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை அதிநவீன சிகிச்சையால் குணப்படுத்தி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் குழுவினா் சாதனை படைத்துள்ளனா்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா ஆயுதகளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவரது மகன் தசரதன்(4). இந்த சிறுவன் மூளையில் புற்று நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன். இதையடுத்து அந்த சிறுவனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் முக்கியமான பகுதிக்கு அருகில் கட்டி இருந்தால் முழுமையாக அகற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை  தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்தனர். தொடர்ந்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்ததில் அதில் பாதி புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது . 

இதையடுத்து சிறுவனின் மூளையில் உள்ள கட்டியை முழுமையாக அகற்றி எப்படி  காப்பாற்றலாம்  என்பது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் தலைமையில் புற்றுநோய் கதிரியக்கம் தலைமை பேராசிரியர் மருத்துவர் விஜயகுமார்  மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது எஸ்.ஆர்.டி என்ற அதிநவீன சிகிச்சை முறை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து புற்றுநோய் கதிரியக்க தலைவர் மருத்துவர் தலைமையில் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் மருத்துவ கல்லூரியில் புற்று நோய் கதிர்வீச்சு துறையில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ நேரியல் முடுக்கி, உள் கதிரியக்கம், டெலிகோபால்ட் ஆகியவை மூலம் சிகிச்சை அளிக்க தொடங்கினர். 

இந்த சிகிச்சை முறை மிக நுண்ணியமாக புற்றுநோய் கட்டியை மட்டும் அழிக்கக் கூடியது. மருத்துவர்கள் மற்றும் இயற்பியலாளர்கள் மிக நுண்ணியமாக கம்ப்யூட்டரில் சிகிச்சை முறையை திட்டமிட்டு செய்தனர். முடிவில் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது. தற்போது சிறுவன் நலமுடன் உள்ளான்.

ஆபத்தான நிலையில் இருந்த 4 வயது சிறுவனை அதி நவீன சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்திய மருத்துவ குழுவினர் பாராட்டுக்களை பெற்று வருகின்றனர். தற்போது, 4 வயது சிறுவனின் புற்றுநோய் கட்டிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, நலமுடன் உள்ளார். 

இது குறித்து சிறுவனின் தந்தை பேசும் பொழுது, சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூபாய் 3 முதல் 5 லட்சம் வரை செலவாகும்.  ஆனால் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் ஐந்து நாட்கள் மட்டுமே கதிர்வீச்சை சிகிச்சை செய்யப்படுகிறது. 

மேலும், முக்கியமான கண், இதயம், நுரையீரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்காத முறையில் சிகிச்சை செய்யக்கூடியது. எனவே தஞ்சாவூரை சுற்றி உள்ள அனைத்து மாவட்டங்களில் யாராவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் இந்த அதிநவீன சிகிச்சை முறையை பயன்படுத்திக் கொள்ளலாம், என தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஆம்லெட் கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய ஆசாமிகள்!