விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது... உயர்நீதிமன்றம் உத்தரவு....!

விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது...  உயர்நீதிமன்றம் உத்தரவு....!

விழுப்புரத்தில் முன்னாள் எம் எல் ஏ இல்லத் திருமணத்திற்கு  அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கடந்த ஆகஸ்டில் நடந்த இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியும், பலியான சிறுவனுக்கு உரிய இழப்பீட்டை வழங்க கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு  அமர்வு முன்பு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் பேனர்கள் வைக்க கூடாது என உத்தரவிட்டுள்ளதால், பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என திமுக தலைவர் அறிவித்ததாகவும், அவர் முதல்வராக பதவியேற்ற போது கூட பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் நீதிபதிகள் கூறுகையில், சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு  முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் என கூறுவது மட்டும் போதாது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் , ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளையும் சேர்த்து  சொல்வதாகவும் தெரிவித்தனர். 

மேலும் விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.