அவன் இவன் பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலா விடுவிடுப்பு... அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி தீர்ப்பு...

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவன் இவன் படத்தில் அவதூறாக காட்சி அமைத்ததாகக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் பாலாவை விடுவித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

அவன் இவன் பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலா விடுவிடுப்பு... அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி தீர்ப்பு...

2011ஆம் ஆண்டு நடிகர்கள் விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் அவன் இவன் படம் வெளியானது. அந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்திரித்து காட்சிகள் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ்.தீர்த்தபதி மகன் சங்கராத்மத்ஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு 2018 முதல் பாலா, ஆர்யா இருவருக்கும் தனித்தனி வழக்காக பிரிக்கப்பட்டு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மார்ச் 29இல் ஆர்யா சிங்கம்பட்டி வாரிசு சங்கர் ஆத்மஜனிடம் வருத்தம் தெரிவித்ததையடுத்து ஆர்யா மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

பாலா மீதான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று (ஆக.17) வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று (ஆக.18) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்த நிலையில் இன்றும் (ஆக.18) இயக்குநர் பாலா ஆஜராகவில்லை. இந்நிலையில் இயக்குநர் பாலா இன்று (ஆக.19) நீதிமன்றத்தில் ஆஜராக  வேண்டும் என்று அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

இன்று இயக்குநர் பாலா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து நீதிபதி அவன் இவன் திரைப்பட அவதூறு வழக்கிலிருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து உத்தரவிட்டார். இதுகுறித்து பாலாவின் வழக்கறிஞர் முகம்மது உசேன் கூறிய போது சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக காட்சி சித்தரிக்கப்படவில்லை என்பதற்கு நாங்கள் வைத்த வாதத்தை ஏற்று குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இயக்குநர் பாலாவை வழக்கிலிருந்து விடுவித்துள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு என்றார்.

இயக்குநர் பாலா தரப்பில் வழக்கறிஞர் முகம்மது உசேன், முகம்மது நயினார் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார்.