கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சி...தண்ணீர் பீய்ச்சி அடித்த பக்தர்கள்!

கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சி...தண்ணீர் பீய்ச்சி அடித்த பக்தர்கள்!

மதுரையில் பச்சை பட்டுடுத்திய கள்ளழகர் வைகையில் இறங்கி அருள் பாலித்த நிலையில், கோவிந்தா கோஷங்களுடன் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கடந்த 20-ந் தேதி முகூர்த்த கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 30-ந்தேதி பட்டாபிஷேகமும், மே 1-ந்தேதி திக் விஜயமும் நடந்தன. தொடர்ந்து மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற நிலையில் மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் புறப்பட்ட நிலையில் மூன்றுமாவடிக்கு வந்தடைந்தார். கள்ளழகரை மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சியில் அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தும், வர்ணித்தும் பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்றனர். 

இதையும் படிக்க : வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்... !

பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தல்லாகுளம் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் புறப்பட்ட  கள்ளழகருக்கு பக்தர்கள் வழிநெடுகிலும் தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரராகவ பெருமாள் ஆற்றில் இறங்கி கள்ளழகரை வரவேற்ற நிலையில் வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் விண்ணதிர கோவிந்தா கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்வை காண மதுரை மற்றுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கானோர்  வருகை தந்துள்ளனர். இதனிடையே பக்தர்களின் பாதுகாப்பு கருதி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து  டிரோன் கேமரா மூலம் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.