திருநங்கைக்கு குழந்தை தத்தெடுக்க அனுமதி மறுப்பு; மத்திய அரசுக்கு கெடு விதித்த உயர்நீதி மன்றம்!

திருநங்கைக்கு குழந்தை தத்தெடுக்க அனுமதி மறுப்பு; மத்திய அரசுக்கு கெடு விதித்த உயர்நீதி மன்றம்!

குழந்தை தத்தெடுக்க அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த மனுவில் மத்திய அரசு பதிலளிக்க மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையில் குடியேற்றத் துறை அதிகாரியாக பணிபுரியும் திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த மனுவில், பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க, குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து டில்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததாகக் கூறியுள்ளார்.

தத்தெடுப்பதில் சிறார் நீதி சட்டம், எந்த பாலின பாகுபாட்டையும் தெரிவிக்காத நிலையில், திருநங்கை என்ற காரணத்தை கூறி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், அந்த உத்தரவை ரத்து செய்து, தனது விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருக்கிறார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி மத்திய அரசும், மத்திய தத்தெடுப்பு ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் பதிலளிக்க மேலும் அவகாசம் வேண்டுமென மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று நீதிபதி, மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க:"முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை" மணிப்பூர் முதல்வர் அறிவிப்பு!