மிரட்டும் டெல்டா பிளஸ் வைரஸ்... விரைவில் பகுப்பாய்வு பரிசோதனை மையம்.. அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்..

சென்னையில் 25 நாட்களுக்குள் டெல்டா பிளஸ் வைரஸ் பகுப்பாய்வு பரிசோதனை மையம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மிரட்டும் டெல்டா பிளஸ் வைரஸ்... விரைவில் பகுப்பாய்வு பரிசோதனை மையம்.. அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்..
டெல்டா பிளஸ் வைரஸ் கொரோனா 3வது அலையாக உருவெடுக்கும் என்ற அச்சம் இருப்பதால், சென்னையில் 25 நாட்களுக்குள் டெல்டா பிளஸ் வைரஸ் பகுப்பாய்வு பரிசோதனை மையம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
மா.பொ.சியின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரசால் 9 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த மே மாதத்திலேயே இந்த தொற்று உருவாகியுள்ளதாகவும், 9 நபர்கள் வீடு, வசிக்கும் பகுதி, தொடர்புடைய நபர்களை கண்காணித்ததில் அவர்கள் குணமாகி பணிகள் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
 
இதுக்குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறிய அவர், இதுதான் கொரோனா 3வது அலையாக உருவெடுக்குமோ என்ற அச்சம் இருப்பதால், சென்னையில் பகுப்பாய்வு பரிசோதனை கூடம் அமைக்க திட்டமிடப்பட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், ரூ. 2.50 கோடி செலவில் இயந்திரங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், 25 நாட்களுக்குள் பரிசோதனை மையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.
 
மேலும், முதலமைச்சர் சட்டமன்றத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு பின் சிகிச்சை அளிக்கும் மையம் உருவாக்கப்படும் என அறிவித்ததாக சுட்டிக்காட்டிய அவர், அதன் படி சென்னை கிங்க்ஸ் மருத்துவனையில் சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் முதலமைச்சர் நேரில் துவங்கி வைப்பார் எனவும் திட்டவட்டமாக கூறினார்.
 
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் பொது நோய்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கண்காணிக்க தொடங்கியுள்ளதாகவும், தற்போது வரை பரவல் இல்லை இருப்பினும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் எனவும் குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா 3வது அலைக்கும் தயாராக இருப்பதாகவும், 2வது அலைக்காக பிரத்யேகமாக 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், 1 லட்சம் படுக்கைகள் ஏற்கனவே இருப்பதாகவும், அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் தொடரும் எனவும், 3வது அலை வந்தாலும் அதை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசு தயாராக இருப்பதாகவும் உறுதிப்பட தெரிவித்தார்.
 
கொரோனா தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், கரும்பூஞ்சை நோய் குறித்து நேற்று மருத்துவ வல்லுநர் குழு இடைக்கால அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், டெல்டா பிளஸ் வைரஸ் தொடர்பாக தொடர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.