விசாரணையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

மாற்றுத்திறனாளி பிரபாகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயை நிவாரண தொகையாக அறிவித்துள்ளார். 

விசாரணையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருடப்பட்ட வழக்கில், மாற்றுத்திறனாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 12ம் தேதி, உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக  காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவர், தலைமை காவலர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். 

இந்தநிலையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்ச ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழப்பு தொடர்பான வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்