வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்...! அதிகாரிகளுக்கு போடப்பட்ட ஐந்து உத்தரவுகள்...!

வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்...! அதிகாரிகளுக்கு போடப்பட்ட ஐந்து உத்தரவுகள்...!
வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்...! அதிகாரிகளுக்கு போடப்பட்ட ஐந்து உத்தரவுகள்...!

தமிழ்நாட்டில் வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவது குறித்து  தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள பகுதிகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகள்  குறித்தும் இதனால் விவசாயிகள் படும் இன்னல்கள் குறித்தும் அதற்கான தீர்வு  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

வீணாகும் பயிர்கள் ... விவசாயிகள் கோரிக்கை... 

தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை  மற்றும் அதனைச்சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்குள் யானை, குரங்கு, மான், காட்டுப்பன்றி  போன்ற வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு போன்ற  மதிப்புமிக்க பயிர்களை நாசம் செய்து வருகின்றன.  இதனால் பெரிதளவில் விவசாயிகள் பலர் அவதிப்படுகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் - , விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களிலும், வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான ஆலோசனைக் கூட்டங்களிலும் தங்களது பயிர்களை   பாதுகாக்க ஆவண செய்யுமாறு  துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், மற்றும் துறைச்  செயலாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

நிரந்தர தீர்வு என்ன ?.... ஐந்து உத்தரவுகள்...

இவற்றிக்கு நிரந்தர தீர்வு காண சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த துறையின் அதிகாரிகளிடம் நீண்ட நேர ஆலோசனைக்கு பின் ஐந்து அறிவுரைகளை வழங்கினார் இறையன்பு.

அவை பின்வருமாறு ; 
       1. முதன்மை வனப்பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையில் தனிக்குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தாண்டி தீர்வுகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.  
      2.வேளாண்மை, தோட்டக்கலைத்துறை சார்பில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும். அதில் பயிர்களை பாதிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை, பயிர் சாகுபடி பரப்பு குறைதல்  மற்றும்  மாற்றங்கள் குறித்த  விபரங்கள் , விவசாயிகளின் புகார்கள் அடங்கிய  புள்ளி விபரங்களை மாவட்டரீதியாகவும் 
ஆண்டுவாரியாகவும், சமர்ப்பிக்க வேண்டும். 
      3. அவ்வாறு மாவட்டரீதியாக பெறப்படும் விபரங்களையும் வனத்துறையால் சமர்பிக்கப்பட்ட இழப்பீடு அறிக்கையோடு ஒப்பிட்டு பார்த்து பாதிப்பின் காரணத்தினையும் அதற்கான நடவடிக்கைகளையும் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் .
      4. மேலும், முதன்மை வனப்பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையிலான தனிக்குழுவானது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு சென்று அங்கு கையாளப்படும்  செயல்முறைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். 
     5.மேல்கூறிய அனைத்து விபரங்களையும் சேகரித்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இது தொடர்பாக எடுக்க வேண்டிய  நடவடிக்கைகளையும் அதற்கான அறிக்கைகளையும் அரசுக்கு சமர்ப்பித்து சரியான ஆலோசனைகளை பரிந்துரை செய்யவும் , விவசாயிகளின் துயரை உடனடியாக போக்க இவை 
அனைத்தையுமே ஒரே மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.     

தலைமை செயலாளரின் இந்த உடனடி நடவடிக்கையானது பயிர்கள் சேதத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பெரும் ஆறுதலை தரும். வனவிலங்குகளுக்கும் பாதிப்பின்றி பயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும்  இந்த செயல்முறைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.