நீர்நிலையில் அமைந்துள்ளதா சாஸ்த்ரா கல்வி நிறுவனம்?

நீர்நிலையில் அமைந்துள்ளதா சாஸ்த்ரா கல்வி நிறுவனம்?

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்தின் ஒரு பகுதி, நீர்நிலைகளில் அமைந்துள்ளதாக கூறப்படும்  குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாஸ்த்ரா பல்கலைக்கழம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால்  சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசாங்கத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை 30 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளது. அதில் ஒரு பகுதி நீர்நிலை ஆகும். இதனால் தமிழக அரசு இடத்தை காலி செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாஸ்த்ரா தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை:

கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. அவர்களின் கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு  உத்தரவு பிறப்பித்தது. மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த சாஸ்த்ரா: 

தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில், அரசு நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி மாற்று இடம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதிக்க கோரி அரசுக்கு  விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமா என்பதை அரசு விளக்கினால், இந்த வழக்கை நடத்த ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் எடுத்து வைத்த வாதங்கள்:

அப்போது தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது, ஆக்கிரமிப்பின் மீது கடந்த  35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க விடாமல் பல்கலைக்கழக நிர்வாகம் தடுப்பதாகவும், சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளில் சிறுசிறு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால், முதலில் சாஸ்த்ரா அக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டெடுங்கள் என பொதுமக்கள் வலியுறுத்துவதாகவும், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நீர் நிலை ஆக்கிரமிப்பு உள்ளதால் மாற்று இடம் பெறும் அரசாணை சாஸ்த்ரா பல்கலைகழகத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதில் சாஸ்த்ரா ஆக்கிரமித்துள்ள 30 ஏக்கர் நிலத்தில் ஒரு பங்கு  நீர்நிலைதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், அரசின் நடவடிக்கையால், அங்கு தங்கியுள்ள மற்றும் படிக்கின்ற மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால், வழக்கு முடியும் வரை சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டடங்கள் சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.