கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி ஆகஸ்டு 9ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி, நாளை முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 6 மணி வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கடைகளின் நுழைவு வாயிலில் கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து கடைகளும் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்க கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.இந்த விதிமுறைகளை பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்து செயல்படும் வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிகளவு கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும், இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர், 3-ம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.