போராட்டத்தில் விலங்குகளை வதை செய்வதா? - உயர்நீதிமன்றம்

போராட்டத்தில் விலங்குகளை வதை செய்வதா? - உயர்நீதிமன்றம்

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டங்களில், எருமை மாட்டிடம் மனு அளிப்பதற்கு அனுமதி மறுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மனுதாக்கல்:

திருவண்ணைநல்லூரில் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்றும், சம்பந்தப்பட்ட தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியதாகவும் ஆனால், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். 

வழக்கு விசாரணை:

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி சதீஷ்குமார், ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில், விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என தெளிவுப்படுத்தினார். காலை முதல் மாலை வரை, எருமை மாட்டை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது, மிருக வதை  தடைச் சட்டத்தை மீறிய செயல் என சுட்டிக்காட்டிய நீதிபதி, எருமை மாட்டுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/Who-has-ADMK-office-key-2-options

நீதிபதி உத்தரவு:

அப்போது, விலங்குகளை பயன்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதை அடுத்து, போராட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து வழக்கமான நிபந்தனைகளுடன் நடத்த அனுமதியளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.