பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர் தர்ணா!

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ ராமாபுரம் அருகே அடிப்படை வசதி செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ ராமாபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு திமுகவை சேர்ந்த சகிலா ராஜா என்பவர் பேரூராட்சி மன்ற தலைவராக உள்ளார். செயல் அலுவலராக சிவக்குமார் உள்ளார்.  இந்த பேரூராட்சி மன்றத்தின் மாதாந்திர  கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில்  போளியம்மனூரை சேர்ந்த 9-வது வார்டு கவுன்சிலர் மாலதி தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த சுகாதார வளாகத்தை 6-லட்ச ரூபாய் செலவில் மராமத்து பணி செய்ததாகவும் அதனை தற்போது பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலதாமதம் ஏற்படுத்துவதாக கூறியும், பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திலும் தனது வார்டு பொதுமக்கள் சார்பாக கூறியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் "பொது கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்" என பதாகை எழுதி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தங்களது வார்டில்  மராமத்து செய்த பொதுக்கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி நிர்வாகம் திறந்து விட வேண்டும் என்றும், இதனால் பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுவதாகவும்,  இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் கூறினர். 

இது குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் ஷகிலாவிடம் கேட்டபோது, கழிப்பறை உள்ள செப்டிக் டேங்க் சிறியதாக உள்ளதால் விரைவில் கழிவுகள் நிரம்பி விடுகிறது, பெரிய அளவில் செப்டிக் டேங்க் கட்டுவதற்க்கு போதுமான இடவசதி இல்லாததால், கழிப்பறை பயன்பாட்டுக்கு திறந்து விடுவதில் காலதாமதம் ஏற்பதாகவும், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

பேரூராட்சி மன்ற கவுன்சிலர் கூட்டத்தில் தனது கோரிக்கையை செய்து தரக் கோரி பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.