தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு இன்றியமையாதது...! ஆளுநர்...!! 

தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு இன்றியமையாதது...! ஆளுநர்...!! 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்,"ஆளுநரின் எண்ணித் துணிக" என்ற தலைப்பில் தேசத்தின் வளர்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிறுவனர்களுடன்  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் சிறப்பாக செயல்பட்ட சமூக செயல்பாட்டாளர்களுக்கு ஆளுநர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இதில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, தமிழருவி மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி, பல்வேறு செயல்பாட்டாளர்கள் சமுதாயத்திற்கு பல்வேறு நன்மைகளை தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து செய்து வருவதை பாராட்டினார். மேலும், அரசு சாரா நிறுவனங்கள்  தேசத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு பங்களிப்பை அளித்து வருகிறார்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து, "ஒரு தேசம் என்பது அரசாங்கத்தால் மட்டும் கட்டமைக்கப்பட்டு விட முடியாது. அழகான சாலைகள் விமான நிலையங்கள் ராணுவம் இருப்பது மட்டுமே தேசம் கிடையாது. தேசம் என்று வரும்போது ஒவ்வொருவரை ஒவ்வொருவரும் ஒன்றிணைக்க வேண்டும். தேசம் என்பது நாடு மாநிலம் என்பதை தாண்டியது. தன்னார்வலர்களுடைய இந்த அர்ப்பணிப்பின்றி, ஒரு தேசத்தை எளிதில் கட்டமைத்து விட முடியாது" என தெரிவித்தார். 


மேலும், "பெண்களுக்குமான மாற்றங்கள் நாட்டில் நடைபெற்று வருகின்றன. அதிகாரத்தை பெண்கள் தான் கட்டமைக்கின்றனர். என் வீடு உட்பட அனைவர் வீட்டிலும், குடும்பத்திலும் பெண்கள் கையில் தான் அதிகாரம் உள்ளது பல சிக்கலான சூழ்நிலையில் குடும்பத்தில் பெண்கள் தான் நல்ல முடிவு எடுப்பார்கள். நாட்டில் முன்பு ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் என்ற வீதத்தில் தான் மக்கள் தொகை இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது" என்றும் கூறினார்.

நிறைவாக, நாம் அனைவரும் "ஒரே குடும்பம்" என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் வாழ்ந்த ரிஷிகளும் முனிவர்களும் எடுத்து கூறி இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர், இப்பொழுது ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்றுள்ளது என்றும் அதில்  நமது எண்ணம்  "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும் கூறியுள்ளார்.