சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை... கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை... கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 9ஆம் தேதி முதல் இன்று வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய அல்லது பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே கடந்த 3 நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில், சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் பலத்த மழை பெய்தது. இதனிடையே புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, செங்குன்றம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.  

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. தஞ்சை மருத்துவக் கல்லூரி,  புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், நாஞ்சிகோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களில் கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக கனமழை கொட்டி தீர்த்ததால் சம்பா சாகுபடி சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.  கொள்ளிடம் பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாளாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் சம்பா சாகுபடி அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.