நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து...

உலக முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியிலும் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய கிறித்துவ மக்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவும், தமிழக அரசும் என்றைக்கும் தோளோடு தோள் சேர்த்து துணை நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.  

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் அன்பு, சகோதரத்துவம், அமைதி, தியாகம், எளிமை, ஈகை ஆகியவற்றை உலகுக்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவதாக குறிப்பிட்டார். புதிய வகை கொரோனா பரவி வரும் சூழலில், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மக்கள் கிறிஸ்துமஸ் தினவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கலவரங்களும், இரத்தக் களறிகளும் மனித சமுதாயத்திற்குப் பேரபாயமாக அச்சுறுத்தும் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கு ஏசுநாதரின் அறிவுரைகள் மிகவும் இன்றியமையாதவை என குறிப்பிட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம் எனவும் பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்,  வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

மிகச்சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.