சமாதானத்திட்டம் குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் - அமைச்சர் மூர்த்தி பதிலுரை!

சமாதானத்திட்டம் குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் - அமைச்சர் மூர்த்தி பதிலுரை!

வணிகவரி நிலுவையை வசூலிப்பதற்கான சமாதானத் திட்டத்தின் சட்ட முன் வடிவு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு சட்ட மசோதாவாக நிறைவேற்றப்படுமென வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வணிகவரி நிலுவையை வசூலிக்க சமாதானத் திட்டத்தை கொண்டு வருவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், 1999, 2002, 2006, 2008, 2010, 2011 என்று ஆறு முறை அமல்படுத்தப்பட்ட சமாதான திட்டத்தின் மூலமாக வசூல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு எனவும், இதை நிரந்தரமாக சட்ட மசோதாவாக கொண்டு வர காலதாமதம் செய்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிக்க : மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா...!

அதற்கு பதிலளித்த வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஒரு முறைத் தீர்வு திட்டமான சமாதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, வணிகர்களின் நீண்ட கால வரி நிலுவைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் மொத்தம் 340 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது, தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம், மைய விற்பனை வரிச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டத்தின் கீழ் மொத்தம் ரூபாய் 27 லட்சத்து 52 ஆயிரத்து 682 கோடி ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் வரி நிலுவைகளை வசூல் செய்யும் சமாதானத் திட்டத்தின் சட்டமுன்வடிவு குறித்த கோப்பு நிதி அமைச்சரின்  ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகவும், அவரின் ஒப்புதலுக்கு பின்னர் முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சமாதானத் திட்டம் நடைமுறைப்படுத்த உரிய  நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.