ஆன்லைன் சூதாட்ட தடையை நீக்க வழக்கு; வாதங்கள் நிறைவு!

ஆன்லைன் சூதாட்ட தடையை நீக்க வழக்கு; வாதங்கள் நிறைவு!

ஆன் லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

ஆன் லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

வழக்கில் அரசுத்தரப்பு வாதங்களுக்கு பதிலளித்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இன்று இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பதில் வாதங்களை முன் வைத்தார்.

அப்போது அவர், பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க சட்டம் வகை செய்கிறது எனவும், நேரடியாக விளையாடும் விளையாட்டுக்கும், ஆன்லைன் விளையாட்டுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.

ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள், ஒவ்வொரு விளையாட்டுக்கும் 7 முதல் 16 சதவீதம் சேவை கட்டணமாக வசூலிப்பதாகவும், பந்தயம் வைத்த விளையாட்டுகள் தவிர, பிற ஆன்லைன் விளையாட்டுக்களையும் இந்த சட்டம் மூலம் ஒழுங்குபடுத்த முடியும் என்றார்.

இந்த வாதங்களுக்கு பதிலளித்து, ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள், விளையாட்டுக்களை நடத்துவதற்காக வெற்றி பெற்றவரிடம் 5 முதல் 7 சதவீதம் மட்டுமே சேவை கட்டணமாக வசூலிப்பதாக குறிப்பிட்டார்.

மனுதாரர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசுத்தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்ய  அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததாக அறிவித்தனர்.

தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:மாறுகிறது இந்திய நாட்டின் பெயர்?