மாற்றுத்திறனாளியின் பணி நியமனத்தை ரத்து செய்த ஆட்சியர்; உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

மாற்றுத்திறனாளியின் பணி நியமனத்தை ரத்து செய்த ஆட்சியர்; உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

தூத்துக்குடியில், மாற்றுத்திறனாளிக்கான பணி நியமனத்தை ரத்து செய்யப் போவதாக, மாவட்ட ஆட்சியர் அனுப்பிய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாழுக  பகுதியைச் சார்ந்த ஆனந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: 

"60% மாற்று திறனாளியான நான் கடந்த டிசம்பர் 2022 ஆம் ஆண்டு முத்தையாபுரம் ஊராட்சி எழுத்தாளருக்கு முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். மேலும், மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு  பிரிவில் தேர்வு செய்யப்பட்டு, கிராம உதவியாளராக  பணிபுரிந்து வருகின்றேன்" என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடந்த மாதம் அவரது பணி இன சுழற்சி முறை தவறானது என கூறி பணியை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக அவருக்கு  நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எனவே எனக்கு அனுப்பிய மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸிற்கு தடை விதித்து பணி தொடர உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜீ. ஆர் சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான BC சிறப்பு மாற்றுத்திறனாளி பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெற்றுள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கான BCM  இட ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தவறாக புரிந்து கொண்டு மனுதாரர் பணி நியமனத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர் என கூறினார்.

இதனை பதிவு செய்த நீதிபதி மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படிக்க: தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு : தலைமைச் செயலாளர் ஆலோசனை!