"கபடி அணியில் தமிழக வீரர்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது" பயிற்சியாளர் கவிதா செல்வராஜ்!

ஆசிய போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி தங்க பதக்கம் பெற்றாலும் தமிழக வீரர்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என இந்திய பெண்கள் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். 

சீனாவில் நடக்கும் ஆசிய போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணிக்கு பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த கவிதா செல்வராஜ் இருந்தார். ஆசிய போட்டியில் பெண்கள் கபடி அணி தங்க பதக்கத்தை பெற்றது. இதையடுத்து பயிற்சியாளராக இருந்த கவிதா செல்வராஜ் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு கபடி வீரர்கள் உள்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் கவிதா செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "2018ம் ஆண்டு நடந்த போட்டியில் பெண்கள் அணி வெள்ளி பதக்கமும் ஆண்கள் அணி வெண்கல பதக்கமும் பெற்றன. இந்தியாவின் போட்டியான கபடியில் ஆசிய கோப்பையில் தங்க பதக்கம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த முறை தங்க பதக்கம் பெற்றே தீருவோம் என உறுதி எடுத்து இருந்தோம். அந்த உறுதியை நிறைவேற்றி ஆசிய கோப்பையில் கபடி போட்டியில் தங்க பதக்கம் பெற்று உள்ளோம். 2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இந்திய அணி கபடி போட்டியில் கேப்டனாக இருந்து தங்க பதக்கம் பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடி தந்தேன். இந்த ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக சென்று தங்கம் வென்றது பெருமையாக இருக்கிறது. கபடி போட்டியில் தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவில் இருந்து ஒரு வீரர் கூட இல்லாதத்து வருத்தமாக உள்ளது. நான் கேட்பனாக இருந்த போது தென் இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் கபடி வீரர்கள் இருந்தார்கள். ஆனால் இந்த ஆசிய போட்டியில் ஒருவர் கூட இல்லை. தமிழ்நாட்டில் கபடி போட்டிக்கு நிறைய பேரை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு உள்ளேன். 

இந்திய கபடி அணியில் விளையாட மாட்டோமா என்ற கனவு நிச்சயமாக ஒரு நாள் நிறைவேறும். ஆசிய கோப்பையில் பல்வேறு போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று 22 பதக்கங்களை பெற்று உள்ளனர். ஆனால் கபடி போட்டியில் இல்லை என்பது கவலையாக உள்ளது. இந்தியா அணிக்கு தேசிய அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வந்தனர். அதில் ஏன் சேர்க்கப்படவில்லர என்ற காரணங்களை எடுத்து அவற்றை போக்கி திறமை வாய்ந்த வீரர்களாக மாற்ற வேண்டும். கண்டிப்பாக அடுத்த முறை நடக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம் பெறுவார்கள். இறுதி தேர்வு வரை தமிழக வீரர்கள் வந்தனர். ஆனால் இந்திய அணிக்கு ஏன் தேர்வாக வில்லை என்று தெரியவில்லை. 

ஆசிய கோப்பையில் முதன் முறையாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக சென்று உள்ளேன். என்னை பயிற்சியாளராக நியமித்தால் தமிழகத்தை சேர்ந்தவர்களை சிறந்த கபடி வீரர்களாக உருவாக்குவேன். வயது காரணமாக நான் விளையாட முடியாது. முன்னாள் வீரர்களை ஊக்குவித்தால் வருங்கால வீரர்கள் அதை பார்த்து சிறப்பாக விளையாட வருவார்கள். இந்திய பெண்கள் கபடி அணிக்கு 100வது பதக்கமாக தங்கம் கிடைத்தது. இதை பாராட்டி பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பாராட்டியது பெருமையாக இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுகளுக்கு மேலும் ஊக்கம் தர வேண்டும். வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிக்க: வழக்கறிஞர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பு...!