12 மணி நேர வேலை சட்டமசோதா...! திரும்ப பெற்றதாக முதலமைச்சர் அறிவிப்பு...!!

12 மணி நேர வேலை சட்டமசோதா...! திரும்ப பெற்றதாக முதலமைச்சர் அறிவிப்பு...!!

12 மணி நேர வேலை சட்டமசோதா திரும்ப பெற்றதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

உலகத் தொழிலாளர் தினமான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மே தின பூங்காவில் தொழிலாளர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய முதலமைச்சர் சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நலன் சட்ட முன்வடிவை திரும்ப பெற்றதாக அறிவித்தார். மேலும் விரைவில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் செய்தி குறிப்பாக இது தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டப்பேரவையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்  தொழிலாளர்களின் பணி நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனால் கொண்டு வரப்பட்டது. அப்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி போன்றவை இச்சட்ட மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. 

தொடர்ந்து, இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களும் கோரிக்கை வைத்து ஆர்பாட்டங்களை அறிவித்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திமுக அரசு அழைப்பு விடுத்திருந்தது.  இதனை ஏற்று நேற்று மாலை அரசின் சார்பில் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவுடன் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதில் கலந்து கொண்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் திமுகவின் சொந்த தொழிற்சங்கமான தொமுசவே இச்சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அப்போதும் இம்மசோதாவை திரும்பப் பெற பல கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில் இச்சட்ட மசோதா திரும்ப பெற்றதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.