வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் தனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வு முடிவடைந்த நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது, தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.30% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்தார்.

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி பெற்ற மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம் எனவும், வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நமது அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.