இனி உள்ளாட்சியில் நல்லாட்சியே... தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

9 மாவட்ட உள்ளாட்சிக் களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன், விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சி தேர்தல் களத்திலும் உதித்திட வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இனி உள்ளாட்சியில் நல்லாட்சியே... தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இனி, உள்ளாட்சியில் நல்லாட்சியே என குறிப்பிட்டுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல் 2021 சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து தற்போது 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலிலும் வரலாறு போற்றும் மிகப் பெரும் வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது திமுக  தலைமையிலான அரசின் 5 மாத கால ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு  மக்கள் மனப்பூர்வமாக வழங்கிய நற்சான்றிதழ் என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்..

நாள்தோறும் திட்டங்கள், துறைதோறும் முழு வீச்சிலான செயல்பாடுகள் எனத் தமிழ்நாட்டின் இருண்ட காலத்தை விரட்டி அடிக்கும் உதயசூரியனாக திமுக ஆட்சி ஒளி வீசுகிறது எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உளளாட்சி தேர்தல் வெற்றிக்கு உழைத்திட்ட தொண்டர்கள் மற்றும்  களப்பணியாற்றிய தோழமைக் கட்சியின் நிர்வாகிகள்  தொண்டர்கள் அனைவருக்கும் என நெஞ்சார்ந்த நன்றி என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று ஒருபோதும் இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை உங்களில் ஒருவனான தனக்குக் கிடையாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.கழகத்தினர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். தூய்மையான - வெளிப்படையான நிர்வாகத்தினை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாகவே கூடாது எனவும் எச்சரித்துள்ள ஸ்டாலின், ஜனநாயகத்தில் மக்கள்தான் நமக்கு எஜமானர்கள் அதை எப்பொழுதும் நெஞ்சில் நிறுத்தி செயலாற்றிட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக் களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன், விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும் உதித்திட வேண்டும் எனதொண்டர்களுக்கு  எழுதிய மடலில் ஸ்டாலின் கூறியுள்ளார்.