சமத்துவபுரங்கள் கட்டி, சமூக நீதி காத்திட வித்திட்டவர் கலைஞர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாடு முழுவதும் சமத்துவபுரங்களை கட்டி, சமூக நீதி காத்திட வித்திட்டவர் கலைஞர் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சமத்துவபுரங்கள் கட்டி, சமூக நீதி காத்திட வித்திட்டவர் கலைஞர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தென் மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, 120 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 9 சமத்துவபுரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார். மின்வசதி, கழிப்பறை வசதியுடன் கூடிய குடியிருப்புகளுடன், அறிஞர் அண்ணா விளையாட்டு திடல், கலைஞர் சிறுவர் பூங்கா, மழைநீர் வடிகால்கள், நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம், நூலகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு கால்வாய்கள் சீரமைக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர், தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக வேண்டும் என்பதே இலக்கு என்றார். கண்ணதாசன், பொன்னம்பல அடிகளார் போன்று, பெரும் மதிப்பு மிக்கவர்களை தமிழகத்துக்கு வழங்கியது சிவகங்கை மண் என்றும் புகழாரம் சூட்டினார்.