வலிமை சிமெண்ட்டை அறிமுகம் செய்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மலிவு விலை ‘வலிமை’ சிமெண்ட்டை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். 

வலிமை சிமெண்ட்டை  அறிமுகம் செய்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தற்போது சிமெண்ட், மணல், செங்கல்  உள்ளிட்டவற்றின் தேவையும் அதிகரித்து வருவதன் காரணமாக, அவற்றின் விலையும் பன்மடங்காக உயர்ந்துள்ளது. வெளிச்சந்தைகளில் ஒரு மூட்டை சிமெண்ட் 490 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கு வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாமர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, ‘வலிமை’ என்ற பெயரில் மலிவு விலையிலான சிமெண்ட் அறிமுகம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி அரசு நிறுவனமான தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்படும் சிமெண்ட், ‘வலிமை’ என்ற பெயரில் வெளிச்சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   வலியதோர் உலகம் செய்வோம் எனும் கருத்தை மையமாக கொண்டு, இந்த சிமெண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சிமெண்ட்டின் சில்லறை விற்பனை விலை மேலும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.  வலிமை சிமெண்ட்டின் ஒரு மூட்டை விலை 360 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் ரக சிமெண்ட் 420 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே வலிமை சிமெண்ட்டினை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக வேலு மாவட்டம் காட்பாடியில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேளாண் நாற்றுகளும் வழங்கப்பட்டது.