ரூ.74.21 கோடி மதிப்பிலான 102 திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

தேனியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 102 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ.74.21 கோடி மதிப்பிலான 102 திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

தேனி மாவட்டத்தில் 114 கோடி ரூபாய் மதிப்பில், முடிவுற்ற 40 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 74 கோடியே 21 லட்சம் மதிப்பிலான 102 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 10 ஆயிரத்து 427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து தேனி மாவட்டத்தில் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை திமுக ஆட்சியில் 32 கோடி செலவில் கட்டப்பட்டதாகவும், இந்த அணையால் 50 கிராமங்கள் பயன்பெறுவதாகவும் தெரிவித்தார்.

தேனி மாவட்ட மக்களின் கனவு திடமான 18-ஆம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசுதான் எனக் கூறிய முதலமைச்சர், அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்றியதாகவும், 91 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் இலங்கை தமிழர்களுக்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல் ஆட்சி எனக் கூறினார்.