புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறதா..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறதா..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தென்மேற்கு பருவ காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 2 முறை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள், வரும் 11-ந் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.