பெயர் மாற்றுவதால் கல்வித்தரம் உயர்ந்து விடுமா....? கேள்வியெழுப்பிய ஆதிதிராவிட நலத்துறை!!

பெயர் மாற்றுவதால் கல்வித்தரம் உயர்ந்து விடுமா....? கேள்வியெழுப்பிய ஆதிதிராவிட நலத்துறை!!

ஆதிதிராவிட நலத்துறைப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வலியுறுத்தி ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகள் நலக்கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தின் முன்பாக ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள் நல கூட்டமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஆதி திராவிட நலத்துறைப் பள்ளிகளை இணைக்கும் தமிழக அரசின் முயற்சியை எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவர்களை ஜாதிய பாகுபாடு கொண்டு நடத்துகின்றனர் என ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகள் நலக் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய ஆதிதிராவிட நலத்துறைப்பள்ளிகள் நல கூட்டமைப்பினர்,  ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வரக்கூடாது எனவும் அதை மேம்படுத்துவதற்கான வழிகளை தான் அரசு யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.  மேலும் ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்காக நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வீதம் குறைந்துள்ளது என்றால் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் அதை விடுத்து இவ்வாறு பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதால் எந்த பயனும் ஏற்படாது எனவும் கூறியுள்ளனர்.

இவற்றை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதாலோ பெயர் மாற்றுவதாலோ மாணவர்கள் சேர்க்கை, கல்வித்தரம் உயர்ந்து விடுமா என்று கேள்வி எழுப்பிய அவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளிகள் சமூக நோக்கோடு கொண்டுவரப்பட்டது எனவும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவர்களை சாதி பாகுபாடு கொண்டு நடத்துகின்றனர் எனவும் தெரிவித்த அவர்கள் எனவே ஆதிதிராவிட நலப்பள்ளிகள் தான் அந்த மாணவர்களுக்கு பாதுகாப்பு எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:  கிருஷ்ணகிரியில் தொடரும் ஆணவக் கொலைகள்....!!