சந்திரபாபு நாயுடு கைது; ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்!

சந்திரபாபு நாயுடு கைது; ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து,  ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.  இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

திறன் மேம்பாட்டு பயிற்சியில் 370 கோடி ரூபாய் மோசடி செய்தாக புகார் கூறி ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியினர், பல்வேறு இடங்களிலும் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பவமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள், தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன.
 
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள், அனைத்தும், பேருந்து நிறுத்தத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோன்று, ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு வரும் பேருந்துகளும், நிறுத்தப்பட்டிருந்தன.  இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதனிடையே தற்போது நிலமை சீராகி வருவதால் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், இருந்து ஆந்திராவிற்கு செல்லும் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காஞ்சிபுரம், புதுச்சேரி, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திருத்தணி வழியாக ஆந்திரா மாநிலம், நகரி, புத்தூர், காளஹஸ்தி கோயில்களுக்கு செல்லும்,  பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர். தனியார் பேருந்துகள் மட்டும் சொற்ப அளவில் செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது. 

இதேபோன்று, சென்னை மாதவரம் மாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர செல்லும் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவில்லை. இங்கிருந்து, சராசரியாக ஒரு நாளைக்கு 149 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும்  திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  

இதையும் படிக்க:யானைகள் நடமாட்டம், "வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" வனத்துறையினர் எச்சரிக்கை!