புதிய காற்றழுத்த தாழ்வு: 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு  

வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு: 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு   

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து நாளை வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக நாளை முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேபோல், நாளை மறுதினமும் , 26-ந்தேதியும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.