தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழையானது  இன்று காலை வரை தொடர்ந்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் காலை முதல் விடுபட்டிருந்த மழை மீண்டும் தொடங்கியுள்ளது. எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், கோடம்பாக்கம், கிண்டி , அடையாறு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 86 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுமாறு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க : தெலுங்கானாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு!

இதேபோல், நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
  
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி , நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழையும் சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை மழை தொடர்ந்த நிலையில், அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.