ஆளுநர் மாளிகை முற்றுகை; த.வா.க வினர் 870பேர் மீது வழக்குபதிவு!

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 870பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் வேணுகோபால் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று சின்னமலை பகுதியில் இருந்து வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் வேணுகோபால் உட்பட 870 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!