மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தரப்பில் வாக்குறுதி அளித்தபடி செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அண்மையில் வழங்கப்பட்டன. 

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் அறிவித்து அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உரிமைத் தொகை பெற மகளிர் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் முகாம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட தகவல் அடங்கிய டோக்கனைகளை ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகித்தனர்.

 இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 35 ஆயிரத்து 923 முகாம்களில் இன்று முதல் பதிவு செய்யப்படவுள்ளன. இதற்காக, தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில்  முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் ஆயிரத்து 500 பெண்கள் பங்கேற்ற நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 36 ஆயிரம் முகாம்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க || உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்!