கீழடி, அகரம், கொந்தகையில் அகழாய்வு.. 8-ம் கட்ட அகழாய்வில் 21 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு!!

கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தின் இரண்டு குழிகளில் மொத்தம் 21 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி, அகரம், கொந்தகையில் அகழாய்வு.. 8-ம் கட்ட அகழாய்வில் 21 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு!!

கீழடியில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதியும், அகரம், கொந்தகையில் மார்ச் 30-ம் தேதியும் அகழாய்வு பணிகள் தொடங்கின.

கீழடியில் மொத்தம் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு நீள்வடிவ தாயக்கட்டை, பாசிமணிகள், வளையல்கள், சேதமடைந்த பானைகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அகரத்தில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு சுடுமண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கொந்தகை தளத்தில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் 12 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இதில் ஒரு தாழி முழுமையாக மூடியுடன் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

புதிதாக தோண்டப்பட்ட குழியில் ஒன்பது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதனால், இதுவரை 21 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றை பாதுகாப்பாக வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

8-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் அடுத்தடுத்து கிடைத்து வருவது  கொந்தகை தளம், பண்டைய காலத்தில் ஈமக்காடாக பயன்பட்டிருக்க கூடும் என்பதற்கான சான்றாக  கருதப்படுகிறது.

இந்தநிலையில் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்த இடங்களை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் அருள் ஜோதி அரசன், சிவகங்கை மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குனர் சிவராமன் உள்ளிட்டோர்  பார்வையிட்டனர்.