ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்...!

ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்...!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் 50 வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ராஜபாளையத்திற்கு வருகை தந்துள்ளார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கும் இதுவரை ஆளுநர் எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர். எனவே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி சிலை அருகே இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கபடுமா? - அமைச்சர் பதில்

இதனைத்தொடர்ந்து கருப்புக்கொடி காட்டி சாலையில் ஊர்வலமாக செல்ல முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல் துறையினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காந்தி சிலை அருகே பெரும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. 

இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 7 பெண்கள் உள்ளிட்ட 76 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.