பாரிமுனை கட்டிட விபத்து...! உயிர் சேதமில்லை...! தீயணைப்பு துறை...!!

பாரிமுனை கட்டிட விபத்து...! உயிர் சேதமில்லை...! தீயணைப்பு துறை...!!

பாரிமுனையில் விழுந்த கட்டிடத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை பகுதியில் இடிந்து விழுந்துள்ள கட்டிடத்தின் இடிபாடுகளை  அகற்றும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை வடமண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காலை 10 மணி அளவில் அர்மேனியன் தெருவில் உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று விழுந்தது என்று தகவல் கிடைத்ததும் நாங்கள் இங்கு வந்தோம், முதலில் நாங்கள் மனிதர்களின் உதவியைக்  கொண்டு இங்கு சுற்றியுள்ள இடிபாடுகளை அப்புறப் படுத்தினோம். பின்பு மீட்பு பணிக்கு தேவைப்படும் பொருட்களான வெட்டு கருவிகள், உடைக்கும் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களையும் கொண்டு முதலில் கட்டிடங்களுக்குள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தோம். இதுவரை இடிபாடுகளை அகற்றும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது" என தெரிவித்தார்.

மேலும், இந்த கட்டிட விபத்தில் அதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையான நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் 4-வது தளத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெறும்போது திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.