வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து...கள்ளகுறிச்சி அருகே பாமகவினர் போராட்டம்..அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

கள்ளக்குறிச்சி அருகே பாமகவினர் அரசு பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து...கள்ளகுறிச்சி அருகே பாமகவினர் போராட்டம்..அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

நேற்றைய தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தது. முறையாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு செய்யாமல் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதாக  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர்  ஆகியோர் கொண்ட அமர்வு தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பகண்டை கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெறாமல் 50-க்கும் மேற்பட்டோர் சாலையின் நடுவே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும் பா.ம.கவினருக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் கண்ணாடியை பாமகவினர் கல் வீசி உடைத்ததாக கூறப்படுகிறது. இதில் பேருந்து ஓட்டுனரின் தலையில் காயம் ஏற்பட்டது.  இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இருப்பினும் இதுவரை பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்தும், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியது குறித்தும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.