"அண்ணாமலை வெளிநாடு பயணங்களில் மர்மங்கள் இருக்கின்றது" கே.பாலகிருஷ்ணன் சந்தேகம்!

"அண்ணாமலை வெளிநாடு பயணங்களில் மர்மங்கள் இருக்கின்றது" கே.பாலகிருஷ்ணன் சந்தேகம்!

பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணங்களில் மர்மங்கள் இருக்கின்றது அதனை அரசுதான் புலன் விசாரணை செய்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ஆவடி மாநகராட்சியில் உள்ள கட்டமைபை மேம்படுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஆவடி மாநகராட்சி அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆவடி தொகுதி செயலாளர் ஜான் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில (மார்க்சிஸ்ட்) செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ஆளுநர் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசுகின்ற பொழுது சனாதனத்தை பற்றியும் தமிழ்நாட்டில் சனாதனத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முறையில் பேசி இருப்பது ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த சனாதனத்திற்கு பகிரங்கமாக வக்காளத்து வாங்குகின்ற முறையில் ஆளுநர் பேசியிருப்பது வன்மையான  கண்டனத்திற்கு உரியது. சனாதனத்தில் தீண்டாமை என்பது கிடையாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தீண்டாமை என்பது பல நூற்றாண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கும் சனாதனத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொன்னால், இந்த தீண்டாமை எங்கிருந்து வந்தது என ஆளுநர் விளக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சனாதனத்தை புனிதப்படுத்தும் முயற்சியில் ஆளுநர் இறங்குவாரானால் அந்த முயற்சி வெற்றி பெறாது. ஆளுநர் அவருக்கு அளித்து இருக்கக்கூடிய வேலையை செய்ய வேண்டுமே தவிர, ஒரு ஆர் எஸ்.எஸ் அடிப்படை தொண்டன் போல பேசுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வேண்டுமென்றால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பிஜேபி கட்சியிலோ அல்லது ஆர்.எஸ். எஸ் அமைப்பிலோ சேர்ந்து வரட்டும். ஒரு அரசியல் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்ற ஆளுநர் பதவியை வைத்துக்கொண்டு இப்படி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து அண்ணாமலை லண்டன் பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அண்ணாமலை பற்றிய பலவிதமான சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழும்பிக்கொண்டே  இருக்கின்றன. ஏற்கனவே ஆருத்ரா கோல்ட் நிறுவனத்துடைய ஊழலில் பாஜகவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த உழலிலே அண்ணாமலை அவர்களுக்கு நேரடியாக தொடர்பு இருக்கின்றது என்று ஏற்கனவே பல செய்திகள் வந்திருக்கின்றது. அதேபோல அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணத்திற்கு போவதற்கு பின்னால் என்ன மர்மங்கள் இருக்கின்றது என்ற சந்தேகங்கள் எழும்புகிறது. இவைகளை யெல்லாம் அரசு தன் புலன் விசாரணை துறையின் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:புதிய அமைச்சர்களுடன் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆலோசனை...தீர்மானம் நிறைவேற்றிய என்.சி.பி !