"2024-க்குப் பிறகு பாஜக ஆட்சியில் இருக்காது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நிபந்தனைகள் மூலம் மகளிர் இட ஒதுக்கீட்டை தடுக்க நினைக்கும் பாஜக, 2024-க்குப் பிறகு ஆட்சியில் இருக்காது என்று சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட I.N.D.I.A கூட்டணியில் உள்ள 9 பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.

மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிபந்தனைகள் மூலம் மகளிர் இட ஒதுக்கீட்டை தடுக்க நினைக்கும் பாஜக, 2024-க்குப் பிறகு ஆட்சியில் இருக்காது என்றார். மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு கப்சா சட்டம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார். 

முன்னதாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,  ஏழை, எளிய பெண்கள் பல தடைகளை தாண்டிதான் சமத்துவத்தை பெற வேண்டிய நிலை உள்ளதாக கூறினார். மேலும் பெண்களுக்கான உரிமைகளை பெறுவது நீண்ட பயணம் என்றும், பெண்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார்.

பெரியார் கேள்வி எழுப்பி நூறாண்டுகளுக்கு பிறகும், பெண் அடிமைத்தனம் இன்றும் உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மாநாட்டில் பேசிய அவர், சமூக மாற்றத்திற்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானதாகவும் கூறினார்.

இதையும் படிக்க: வழக்கறிஞர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பு...!