30 குண்டுகள் முழங்க...அவ்வை நடராசனின் உடல் நல்லடக்கம்...!

30 குண்டுகள் முழங்க...அவ்வை நடராசனின் உடல் நல்லடக்கம்...!

முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜனின் உடல் மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவ்வை நடராஜன் மரணம்:

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவ்வை நடராஜன் நேற்று காலமானார். முதுபெரும் தமிழறிஞரான அவ்வை நடராஜன், 1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை, தஞ்சை தமிழ்ப் பல்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்தார். மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றிய அவ்வை நடராசன், டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். 2011-ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

முதலமைச்சர் அஞ்சலி:

இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவ்வை நடராசனின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.  

அரசியல் தலைவர்கள் அஞ்சலி:

இதே போல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அவ்வை நடராசனின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் வைரமுத்து, அவ்வை நடராஜனின் மறைவு தமிழுக்கு பேரிடி என்றார்.

இதையும் படிக்க: திருச்சி சூர்யாவிற்கு 7 நாள்... காயத்ரி ரகுராமுக்கு 6 மாதம்..! அண்ணாமலை அதிரடி உத்தரவு..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் அவ்வை நடராசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

உடல் நல்லடக்கம்:

இந்நிலையில், மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் இறுதி ஊர்வலம் சென்னை அண்ணா நகர் வீட்டில் இருந்து மாலை  4 மணி அளவில் தொடங்கியது. அப்போது, கவிஞர் வைரமுத்து, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உடலை சுமந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவ்வை நடராசனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசியல் கட்சியினர், இலக்கியத் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.