நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு..!

 நிலநடுக்கத்தை கண்காணிக்கும் கருவி பொருத்த நடவடிக்கை..!

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் புவியியல் துறை வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். தட்டபாறை, மீனூர், கொல்லைமேடு ஆகிய பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 3 புள்ளி 6 ஆக பதிவாகி இருந்தது. சில வீடுகளில் விரிசலும் ஏற்பட்டது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில்  புவியியல் துறை வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். இந்திய புவியியல் ஆராய்ச்சி துறையின் உதவி புவியியலாளர் அமிஷ் தாக்கூர், சென்னையில் உள்ள இந்திய புவியியல் துறையின் உதவி புவியியலாளர் சிவகுமார் உள்ளிட்டோர், நிலநடுக்கத்தை உணர்ந்த கிராம மக்களிடம் தகவல்களை கேட்டு பதிவு செய்தனர். இந்த ஆய்வுகளின் முடிவுகள் கிடைக்க பெற்ற உடன், அப்பகுதியில்  நிலநடுக்கத்தை கண்காணிக்கும் கருவி பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.