உடுமலையில் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் குடமுழுக்கு திருவிழா...!

உடுமலையில் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் குடமுழுக்கு திருவிழாவை பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்.

உடுமலையில் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் குடமுழுக்கு திருவிழா...!

உடுமலையில் ஆண்டாள் சீனிவாசன் லேஅவுட் சர்தார் வீதியில் கட்டப்பட்டுள்ள மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் திருக்குடமுழக்கு திருவிழா நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில் காலை 4 மணிக்கு குருபூஜையும், 4:30 மணிக்கு கோபுர கலசம் ஸ்தாபிதம், ஆதிபராசக்தி அம்மன் சிலையை மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடந்தது. 

இந்நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு சக்தி கொடியேற்றுதலும், 11:30 மணிக்கு முதல் கால வேள்வி பூஜையும், அதனை தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி பூஜையும், அஷ்டபந்தனம் மருந்து சாத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும் இன்று காலை 5:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜையும், காலை 9 .15 மணிக்கு ஆன்மீக குரு அருள் பங்காரு அடிகளாரை வரவேற்கும் பாத பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்குள் பங்காரு அடிகளார் குடமுழுக்கு நடத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக உடுமலை தலைவர் ருக்மணி அம்மாள், செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் சிவகாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இதில் உடுமலை திமுக நகர செயலாளர் சி.வேலுச்சாமி, உடுமலை நகர மன்ற தலைவர் மத்தின், மடத்துக்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்பு பணிகளில், உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் உடுமலை மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவை கண்டுகளித்தனர்.