அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்...! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...!

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் ஆவணி மாதம் அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்...! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்...!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசப்பது வழக்கம்.

இந்நிலையில் ஆவணி மாதம் அமாவாசை தினமான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் அம்மனுக்கு பால், நெய்,பழரசம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பட்டு உடுத்தி, காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அமாவாசை தினம் என்பதால் காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் மேல்மலையனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையிலும் பக்தர்கள் குடை பிடித்து நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண, காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

பின்னர், நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியில் உற்சவ மண்டபத்தில் அங்காளம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய் சூடம் மற்றும் நெய் விளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதோடு  200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.